கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் முன்கூட்டியே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் போன்றவற்றை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. அதில் ஊரடங்கை நீட்டிக்க அனைவரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இதற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது