பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்ற ஹன்சாட் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்களின் ஒலிப் பதிவுகள் அடங்கிய இறுவட்டு தொடர்பில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய இறுவட்டை மேலும் பரிசீலித்து தேசிய ரீதியில் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள், பிரமுகர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் விடயங்கள், பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வசனங்கள் ஆகியவற்றை நீக்கிய பின்னர் குறித்த ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்குமாறு குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர்.
இதன் பின்னர் சபாநாயகர் மேலும் அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பது என்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.இந்த இறுவட்டை சபையில் சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுப்பது பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும்.