கட்டுரை- ராமச்சந்திரன் சனத்
ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் சர்வாதிகாரி – கொடுங்கோல் ஆட்சியாளன் என்றெல்லாம் விளிக்கப்படுகின்ற ஹிட்லர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, அனைத்துவிதமான துன்பங்களையும் அனுபவித்து, மூவேளை உணவுக்காக இராணுவத்தில் இணைந்து, தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாகமாற்றி உச்சம் தொட்டவர்தான் அவர்.
வரலாற்றில் இருண்ட பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஹிட்லரின் கொள்கைப்பரப்பாளராக செயற்பட்டவரே ஜோசப் கோயபெல்ஸ் (Joseph Goebbels). ஹிட்லரின் வலது கை, ஏன்! அந்தரங்க செயலாளர் என்றுகூட சொல்லாம்.
எந்தப் பொய்யையும் மக்கள் மத்தியில் நயமாகச் சொல்லி, அவர்களின் மனங்களை மாற்றி நம்பவைக்கும் வித்தை அறிந்தவர்.
அதாவது, ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து – அதை பொதுக் கருத்தாக்கி – அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைக்கும் பெரும் தந்திரக்காரர் என்றே ஜோசப் கோயபெல்ஸ் குறித்து எழுதியுள்ளவர்கள் பதிவிட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளுள் சிலரும் வாக்குவேட்டைக்காக கோயபெல்ஸின் யுக்தியையே கையாண்டுவருகின்றனர்.
அவர்களில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர்தான் அமைச்சர் விமல்வீரவன்ஸ. ‘கோயபெல்ஸ்’ வியூகத்தை அவர் கொள்கையாகவே ஏற்று செயற்பட்டுவருகிறார். தேர்தல் காலங்களில் இவர் முழுமையாக கோயபெல்ஸாகவே மாறிவிடுவார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் தனி நாடு உதயமாகிவிடும் என்ற சிந்தனையை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து, அதிகாரப் பகிர்வு என்றாலே ஆபத்தான விடயம் என்ற விம்பத்தை உருவாக்கியவர்களில் விமலுக்கு பெரும் பங்குண்டு.
அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டவேளையில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாமல்போய்விடும் என்ற கருத்தாடலை உருவாக்கி அப்பணிகளையும் ஸ்தம்பிதமடையச் செய்ததில் விமலும் முக்கிய புள்ளியாவார்.
இவ்வாறு பல விடயங்களை பட்டியலிடாம். சிங்கள், பௌத்த மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வாக்குவேட்டை நடத்துவதற்காக , ஏதேனும் ஒரு நல்லவிடயத்தைகூட மாறுபட்ட கோணத்தில் விமர்சித்து அதற்கு சேறுபூசும் வித்தையும் அறிந்தவர்.
தற்போது தமிழ் மொழியை ஓரங்கட்டும் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதற்கு சட்டரீதியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மொழியை இரண்டாம் இடத்துக்கு தள்ளி,சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மன்னாரிலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர் பலகையை மாற்றுவதற்கு கட்டளையிட்டு,அப்பணியை செய்தும் முடித்துள்ளார்.
இதனால் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கருத்தாடல் உருவாகியுள்ளது. எனவே, தமிழ் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தைக்கூட கோயபெல்ஸ் பாணியில் மக்கள் மத்தியில் விமல் விதைக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.