உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான எல்லைநிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமரச உடன்பாட்டுக்கு அமைவாக இந்த மனுவை விலக்கிக்கொள்ள அனுமதியளிக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை தடுத்துநிறுத்தக்கோரி, கடந்த 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை தற்காலிக தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறத்தது.
இந்நலையில், இந்த வழக்கு மனுதாரர்களால் இன்று மீளப் பெறப்பட்டதையடுத்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.