நத்தார் தினத்தை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகியுள்ளனர்.
உலகின் சில நாடுகளில் தற்போது நத்தார் தினம் மலர்ந்துள்ளது.
நியூஸிலாந்தின் ஒக்லண்ட் நகரில் முதலாவதாக, இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு நத்தார் தினம் மலர்ந்துள்ளது.
இதேநேரம், வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தில் பாப்பரசர் ப்ரான்ஸிஸ் தலைமையில் பிரதான நத்தார் தின ஆராதானை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பிரதான நத்தார் தின ஆராதனை, நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயாத்தில் கத்தோலிக்க போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம், நாட்டின் பல பாகங்களிலும் நத்தர் தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவ மக்களுக்காக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நத்தார் தின ஏற்பாடுகள் யாழ்ப்பாணம் புனித மரியாள் தேவாலயத்தில் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்கள், மற்றும் காயமடைந்த நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நினைவுகூர்ந்து நத்தார் பண்டிகையை விமர்சையாக இன்றி அமைதியாக கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நத்தார் பண்டிகையை மிகவும் அமைதியாக கொண்டாடுமாறும் அவர் கிறிஸ்தவ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு பொருட்களை உபயோகித்து ஒலியை மாசுபடுத்தாமலும், அதற்கான செலவுகளை குறைத்து ஏழை மக்களுக்கு உதவுமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அயலவர்கள், எந்த இனம் அல்லது எந்த மதமாக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து சகோதரத்துடன் வாழ்வதற்கு இந்த பண்டிகை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் பிரதான மதமான பௌத்த மதத்தை சார்ந்த மக்களுடனும், அதேபோன்று இந்து மற்றும் இஸ்லாமிய மக்களுடனும் இணைந்து நத்தார் பண்டிகையை சகோதரத்துவத்துடன் கொண்டாடுமாறும் கிறிஸ்தவ மக்களிடம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.