நீர்கொழும்பு மாநகர சபையின் 2020ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 38 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஐ.தே.க ஆதரவாக வாக்களித்ததுடன் ஜே.வி.பி எதிர்த்து வாக்களித்துள்ளது.
நகரபிதா தயான் லான்சா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு மாநகர சபையின் விஷேட கூட்டம் இடம்பெற்ற போது நகரபிதா தயான் லான்சா 2020ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.
2020ல் ஏற்படும் மொத்த செலவாக 1095.5 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருமானமாக 1059.9 மில்லியன் ரூபாவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரவுசெலவு திட்ட உரையின் போது ஜே.வி.பி. உறுப்பினர் காமினி பிரனான்து வாக்கெடுப்பை கோரினார். வாக்கெடுப்பின் போது ஆதரவாக 41 வாக்குகளும் , எதிராக 3 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்பிற்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவின் 16 அங்கத்தவர்களுடன் இணைந்து ஐ.தே.க 16 அங்கத்தவர்களும் இ.சு.க. 5 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 , ஐக்கிய சுதந்திர முன்னணியின் 1 இரு சுயேட்சை குழுக்களின் 2 வாக்குகளாக 41 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஜே.வி.பியின் 3 அங்கத்தவர்கள் எதிராக வாக்களித்தனர். ஐ.தே.க 3 பேரும் இ.சு.க எவரும் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.
38 மேலதிக வாக்குகளால் நீர்கொழும்பு மாநகர சபையின் 2020ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.