அமைச்சப் பொறுப்புகளை துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக இன்று காலை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக பதவி விலகினார்கள்.
பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் கபீர் ஹசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த கட்சிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீள பொறுப்பேற்க தீர்மானித்துள்ள போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் இறுதி தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.