மேற்கிந்தியத் தீவுகளுடன் நடைபெற உள்ள ஒருநாள், ரி 20 தொடர்களில் தான் பங்கேற்கவில்லை, தான் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள ராணுவம் (டெரிட்டோரியல் ஆர்மி) பாராசூட் ரெஜிமெண்ட் உடன் 2 மாதங்கள் தங்கி பணிபுரியப் போவதாக பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார் தோனி. இதனால் அணித் தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
இராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, பாராசூட் ரெஜிமண்டில் தங்கி பயிற்சி பெற அனுமதி தர வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இதற்கு அனுமதி அளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தோனிக்குப் பயிற்சி தரப்பட உள்ளது. எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன் நேற்று இணைந்தார் தோனி. அங்கு அவர் இரு மாத ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணிக்கு தோனி செல்லவுள்ளார். காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் அவர் ஈடுபடவுள்ளார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.