அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் ஒன்றை பிரகடனப்படுத்த அண்மையில் அமைச்சரவையில் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் அனுமதிகோரியிருந்தார் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பங்களிப்பு வழங்கப்படும் மொழிக் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.எஸ்.மஹாநாம, கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோரும் கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழி கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோபறஹேவா, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.செல்வக்குமாரன் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழறிதம் அமைப்பு 3 செயற்திட்டங்களை ,அரசகரும மொழிகள் அமுலாக்கத்திற்கு பயன்படும் வண்ணம் தயாரித்து வழங்கி நிகழ்விற்கு பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.