2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
2018 ஜனவரி 23 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை உலகிற்கு அறிமுகம் செய்யும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் அபிமானமாகவும் கருதப்படுகின்றது.
ஜனவரி 24 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள இந்த வெற்றிக் கிண்ணம் அன்று பிற்பகல் மாலைதீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார, தேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க, விளையாட்டு அமைச்சின் ஆலோசகர் சுசந்திகா ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.