தரம்சாலா போட்டியில் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி மொஹாலியில் இன்று நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றியீட்டி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மறுமுனையில் படுதோல்வியடைந்த இந்தியா, இன்றைய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கத்தில் உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1–-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இதில் தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இலங்கை அணி 1-–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. ஏனென்றால் தோற்றால் அவ்வணி தொடரை இழந்துவிடும்.
தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, அந்த பெருமையை இழக்காமல் இருக்க வெற்றிக்காக கடுமையாக போராடும். மேலும் தரம்சாலாவில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய வீரர்களின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது.
அனுபவம் வாய்ந்த முன்னாள் தலைவர் டோனி ஒருவர் மட்டுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். மோசமான துடுப்பாட்டத்தினால் வீரர்கள் தேர்வில் தலைவர் ரோஹித் ஷர்மா மாற்றம் செய்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.
தரம்சாலா போட்டியில் விளையாடிய உத்வேகத்தை இன்றைய போட்டியிலும் திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணி பின்பற்றும்.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய மொஹாலி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இன்று மோதுவது 157ஆ-வது போட்டி யாகும். இதுவரை நடந்த 156 போட்டிகளில் இந்தியா 88 போட்டிகளிலும், இலங்கை 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 12 போட்டிகள் வெற்றி. தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
இன்றைய போட்டி முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்ப மாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.