இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் (103 ரன்கள்) அற்புதமான சதம், புஜாராவின் (72 ரன்கள்) நேர்த்தியான ஆட்டத்தால், 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்று ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. இதில் இஷாந்த் வீசிய பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் குக் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் ஜென்னிங்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் (13 ரன்கள்) விக்கெட்டை பும்ரா சாய்த்தார். ஒலி போப் 16 ரன்களில் சமி பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் பென்ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் தனது சதத்தினை பதிவு செய்தார். பென் ஸ்டோக்சும் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். இதில் ஜோஸ் பட்லர் 106 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். அவரைத்தொடர்ந்து பார்ஸ்டோவ் (0) ரன் ஏதுவும் எடுக்காமலும், வோக்ஸ் 4 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்கப்போராடிய பென்ஸ்டோக்சும் 62 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஸ்டுவர்ட் பிராட் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அடில் ரஷித் 30 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், முகமது சமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி கைவசம் 1 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில், வெற்றி பெற இன்னும் 210 ரன்கள் எடுக்க வேண்டும். 5ம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளநிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது