லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே சைக்கிளில் சென்றவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் ஒரு கார் கண்மூடித்தனமாக மோதியது. இது பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் இருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று பயங்கரவாத எதிர்ப்புப் போலீசார் தெரிவிக்கின்றனர். மேற்கொண்டு லண்டனுக்கோ, பிரிட்டன் முழுமைக்குமோ அபாயம் இருப்பதாக எந்த உளவுத் தகவலும் இல்லை என்று ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் நெயில் பாசு தெரிவித்துள்ளார்.
தெற்கு லண்டன் காவல் நிலையத்தில் அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கார் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது. அந்த காரில் வேறெவரும் இல்லை என்றும், ஆயுதங்கள் ஏதும் அதில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்த ஃபோர்டு ஃபியஸ்டா கார் ஒன்று திடீரென எதிர்ப் புறத்துக்குச் சென்று வேண்டுமென்றே சைக்கிளில் சென்றவர்களையும், நடந்து சென்றவர்களையும் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தெரிவிக்கின்றனர்.
பிபிசி வெளியிட்ட வீடியோ ஒன்றில் பாதசாரிகள் நடந்து கடக்கும் பகுதியைத் தாண்டிச் செல்லும் கார் பிறகு பாதுகாப்புத் தடுப்புகள் மீது மோதியது.
டியூப் ரயில் நிலையம் மூடல்
இந்த சம்பவத்தை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் டியூப் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. மில்பேங்க், நாடாளுமன்ற சதுக்கம், விக்டோரியா டவர் கார்டன் ஆகியவற்றை ஒட்டியுள்ள தெருக்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள ஸ்ட்ருட்டன் கிரவுண்ட் பொதுமக்கள் செல்லாதவாறு மூடப்பட்டுள்ளது.
செய்தி உதவி BBC