மறைந்த திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் உடல் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதனை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக அதிகாலை 1 மணிவரை வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிஐடி காலணிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அதிகாலை 3 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காகவும் ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதியின் பூதவுடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதி புதவுடலுக்கு காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி பூதவுடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரச மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கலைஞரின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.