எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட மூன்று அரசியல் கட்சிகள் தாங்கள் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்த நிலையில் அதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியூடாக வெற்றிலைச் சின்னத்திலேயே களமிறங்குகிறது. எனினும் சில தொகுதிகளில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில் அக்கட்சியுடன் கூட்டணியிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் அதனை விரும்பில்லை. இதனால் சிறுபான்மைக் கட்சிகள் விலகிச் செல்வதை தடுக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சியானது வெற்றிலைச் சினத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் நேற்யை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் பின்னர் அதில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் கருத்து வெ ளியிடுகையில் அனைவரும் இணைந்து போட்டியிட தீர்மானித்ததாக கூறினர்.
சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட எம்.பி. பியசேன கமகே குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் தேர்தலில் வெற்றி கொள்ள இணைந்து செயற்படுவோம் என்றார்.
பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண கருத்து வெ ளியிடுகையில்,
அனைவரும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக போட்டியிட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார் என்றார்.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கருத்து வெ ளியிடுகையில்,
உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அந்த முன்னணியினூடாக போட்டியிட தீர்மானித்தன. ஒரு சில இடங்களில் சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகையில்,
தொகுதிகள் மட்டத்தில் தனித்து போட்டியிட அனுமதியளிக்குமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார். சுயாதீனமாக செயற்பட கோரிக்கை விடப்பட்டது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொண்டமான தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் சுதந்திரக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவே முன்வந்தன என்றார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிடுகையில்,
இந்த நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்தோம். அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.