சர்வதேச சந்தையில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 கோடிகளை கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை தங்களது கணினியில் பயன்படுத்தி வருகின்றனர் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட வருடாந்திர கூட்டத்தில் இந்த தகவலை சத்ய நாதெள்ளா தெரிவித்தார். 2018-ம் ஆண்டிற்குள் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை குறிவைத்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைவானதாகவே பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தப்பட்டதே பயனர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்கள் வழங்கும் போட்டி காரணமாக விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டது.
சர்வதேச சந்தையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டும் 99 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது என கார்ட்னர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதள பிரிவு துணை தலைவர் ஜோ பெல்ஃபோரி, மொபைல் போன்களுக்கான விண்டோஸ் 10 இனி வழங்கப்பட மாட்டாது என்ற தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். எனினும் இந்த இயங்குதளத்திற்கான பிழை திருத்தங்கள், பாதுகாப்பு அப்டேட் உள்ளிட்டவை மட்டும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.