இந்தியத் தலைநகர் டெல்லியில், கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதால், அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள், மூக்கை மூடும் விதமாக ‘மாஸ்க்’ அணிந்து விளையாடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது. வாகனம் மற்றும் தொழி்ற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்துள்ளது.
இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பீல்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சற்று முன்னர், ஏழு விக்கெட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களைக் குவித்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி எடுபடவில்லை. ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
238 பந்துகள் மட்டுமே சந்தித்து அவர் இரட்டை சதம் விளாசியது மிகவும் சிறப்புக்குறியதாகும். இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும்.
இதனையடுத்து, இந்த ஜோடி நிலைத்து நின்று ரன்களை குவித்தது. ரோகித் சர்மா 65 ரன்களில் சந்தாகன் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதனையடுத்து, களமிறங்கி அஷ்வின் 4 ரன்களில் வெளியேறினார். கோலி 287 பந்துகளில் 243 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
128 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கேப்டன் கோலி முடிவெடுத்தார். இதனையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
முகம்மது சமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே டக் அவுட் ஆனார். அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா (0) மற்றும் தில்ரூவன் பெரேரா (10) தற்போது விளையாடி வருகின்றனர்.