நாட்டிலுள்ள பெரும்பாலான சிங்கள பௌத்த மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை. சகல மக்களும் சம உரிமையுடன் வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள். யுத்தம் இடம்பெற்றபோது யாழ்ப்பாணத்தை அவர்களிடம் கொடுத்தாவது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள் என சிங்கள மக்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், நான் தான் நாடு பிளவுபடக்கூடாது என்று அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும், நாட்டின் வளங்களை சூறையாடும் குறிப்பிட்ட சில அரசியல்தலைவர்களே மக்கள் பிரிந்திருப்பதை விரும்புகின்றார்கள். அதற்கு நாங்கள் இடங்கொடுக்கக் கூடாது.
வருகின்ற புதிய அரசியலமைப்பு கூட மக்களுக்கிடையில் சமஉரிமையை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறின்றேல் அது வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அரசியலமைப்பாகவே காணப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நாடெங்கிலுமுள்ள 15000 வறிய மாணவர்களுக்கு பாடசாலைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்சம் பவுண்டேஷனால் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக வருகைதந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டு சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்கு இங்குள்ள அனைத்து இனங்களைச் சேர்ந் தலைவர்களும் பாகுபாடின்றி ஒன்றாக போராடியிருக்கின்றார்கள். ஆனால், அதன்பின்னர் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான பாகுபாடுகள், முரண்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட முப்பது வருடகால யுத்தம் ஒன்றுக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டது. இதனால் நாட்டின் அழிவுகள் ஏற்பட்டன. இனங்களுக்கிடையில் பெரிய பிளவொன்று ஏற்பட்டது.
ஆனாலும், கடந்த கால அரசாங்கம் யுத்த வெற்றியை காரணங்காட்டி மீண்டும் ஆட்சிக்கு வந்து இனங்களுக்கிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியது. என்றுமில்லாதவாறு சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெளிவான தரிசனத்துடனும் தெளிவான வாக்குறுதியுடனும் கொள்ளையடிக்காமல் நாட்டில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாக கூறிக்கொண்டு ஆட்சிபீடம் ஏறியது. அதுமட்டுமன்றி கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் தெரிவித்தது. மேலும், நாட்டில் சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழவழி ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தது இது தற்போது நிறைவேறியுள்ளது.
அதுமட்டுமன்றி, அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்பை கொண்டுவருவதாகத் தெரிவித்தது. உண்மையாகவே சிறந்த ஓர் அரசியலமைப்பு எமக்கு அவசியம். ஆகவே, வரவுள்ள புதிய அரசியலமைப்பு அனைத்து இனங்களுக்கும் சம உரிமையை வழங்கும் வகையில் உருவாக்கப்படுவது முக்கியமாகும்.
இனங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் மக்களுக்கிடையில் சம உரிமையையும் கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு தயாரிக்கப்படாவிட்டால் அது வார்த்தைகளுக்கோ அல்லது வேறு சில விடயங்களுக்கோ மட்டுப்படுத்தப்பட்ட அரசியலமைப்பாகிவிடும் என்பதை அனைவரும் நினைவில்கொள்ளவேண்டும்.
ஆனால், என்னதான் நடந்தாலும் நாங்கள் சமாதானமாக வாழ்வதனூடாக மட்டுமே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லலாம். எனது அரசியல் சேவைக் காலங்களில் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களிலுள்ள சிங்கள மக்களிடம் சென்று அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளேன். அப்போது எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது. அதாவது தமிழ் , முஸ்லிம், சிங்கள மக்கள் பிரிந்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாக அமைந்தது.
இன்றைக்கு முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அரசியல் நடவடிக்கைகளுக்காக மொனராகலை மாவட்டத்திற்குச் சென்றேன். அது சிங்கள பௌத்த மக்களைக் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு பிரதேசம். அங்குள்ள மக்களுடன் சந்தித்த நாட்டு நிலைவரம் குறித்த பேசியபோது “இந்த நாட்டில் இவ்வாறான ஒரு யுத்தம் இடம்பெறக்கூடாது. இதனால் நாட்டில் இனங்களுக்கிடையிலான பேதம் உருவாகின்றது. ஆகவே அவர்கள் கேட்கின்ற யாழ்ப்பாணத்தைக் கொடுத்தாவது இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்” என அங்குள்ள ஒரு சிலர் தெரிவித்தனர். அதைக்கேட்ட ஏனைய பௌத்த சிங்கள மக்களும் “அவ்வாறே யாழ்ப்பாணத்தைக் கொடுத்தாவது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்” எனத் தெரிவித்தனர்.
அதற்கு நானோ ” அரசியல் ரீதியாக நாட்டை துண்டு துண்டாகப்பிரித்துக் கொடுக்கமுடியாது. ஆனால், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சம உரிமையைக் கொடுத்தால் அவர்கள் அவ்வாறு தனிநாட்டைக் கோர மாட்டார்கள்” என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
ஆகவே இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
தனியாக எதுவும் செய்யமுடியாத, நாட்டின் வளங்களை சூறையாடுகின்ற சில அரசியல்தலைவர்களே, இவ்வாறு மக்கள் பிரிந்திருப்பதை விரும்புகின்றார்கள். அதைப் பற்றி சொல்லக்கூட எனக்கு வெட்கமாக இருக்கின்றது.
எம்மிடம் நல்ல சமூகத்தலைவர்கள், அரசியல்வாதிகள் என பெரும்பாலானவர்கள் இருந்தாலும் இனவாதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் இவர்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று பயப்படாமல் பேசவேண்டும். அவ்வாறு பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் நின்றுவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.