சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனவே அத்திகதியைப் பிரதானப்படுத்தி தேர்தலுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் செலவினங்களுக்காக கோரப்பட்ட நிதியினை திறைசேரி ஒதுக்கியுள்ளதாகவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 40 உள்ளூராட்சிமன்றங்களின் பெயர்கள் பிழையாக அச்சிடப்பட்டிருந்தன. எனினும் அதனைத் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
ஆகவே சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்துவதில் தற்போதைய நிலையில் எந்தவொரு சிக்கலும் இல்லை. எனினும் பெயர் திருத்தியமைக்கப்பட்ட 40 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுமிடத்து அதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த மன்றங்களுக்கான தேர்தலை பெப்ரவரி 10 ஆம் திகதி நடத்துவதில் சில வேளை சிக்கல் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் எச். ஹூலிடம் வினவியபோது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வர்த்தமானிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை நீக்கிக்கொண்டது.
எனவே ஏற்கனவே வேட்புமனுக்கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சிமன்றங்கள் தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் திங்கட் கிழமை வெளியிடப்படவுள்ளன. ஆகவே சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், நாற்பத்தொரு நகரசபைகளுக்குமாக 341 உள்ளூராட்சிமன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதுடன் அம்மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.