ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய – -இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ் டில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி அடிலெய் டில் இன்று தொடங்குகிறது.
இந்த டெஸ்டில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இது பகலிரவு மோதலாகும். இதற்காக பிரத்தியேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படும். ஆஷஸ் வரலாற்றில் மின்னொளியின் கீழ் நடத்தப்படும் முதல் டெஸ்ட் இது தான்.
தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து நிர்ணயித்த 171 ஓட்டங்கள் இலக்கை அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.
அடிலெய்ட் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். நன்கு ஸ்விங் ஆகும் என்று அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் கூறியுள்ளார். அதனால் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோரின் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும்.
முதலாவது டெஸ்டில் மோசமாக தோற்றதால் விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து அணியினர் சரிவிலிருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் அண்டர்சன், ஜாக் பால், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்தே இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு அமையும். பதிலடி கொடுப்பார்களா அல்லது பணிந்து போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.