இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று(02) முதல் இடம்பெறும் மாகாண மட்ட (சுப்பர் ப்ரொவின்சியல்) 50 ஓவர்கள் போட்டித் தொடரில் பங்கேற்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2017 செப்டெம்பர் மாதம் முதல் இலங்கை அணியில் இடம் கிடைக்காமல் உள்ள லசித் மாலிங்க தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். இதேநேரம் இலங்கையில் சுப்பர் ப்ரொவின்சியல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்த உள்ளூர் மாகாண மட்ட 50 ஓவர்கள் போட்டித் தொடரில் மாலிங்க விளையாடுவாரா என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏஷ்லி டி சில்வா பதில் வெளியிடுகையில்,
” உள்ளூர் மாகாணங்களுக்கிடையிலான 50 ஓவர்களைக் கொண்ட போட்டியில் மாலிங்கவை தம்புள்ளை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டது தொடர்பில் நாம் ஏற்கனவே அவருக்கு அறிவித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவொரு பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே அவர் மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்து எமக்குத் தெரியாது.
எது எவ்வாறாயினும், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமைகளை உடல்தகுதி மற்றும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் மாத்திரமே தேர்வாளர்கள் அவரை இலங்கை அணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால், மாலிங்க அண்மைக்காலமாக இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.
இதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த லசித் மாலிங்கவை அவ்வணி முதற்தடவையாக இம்முறை விடுவித்திருந்தது.
இதன்படி, இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் கலந்துகொண்ட மாலிங்கவை, குறைந்த பட்சம் ஏலத்திலாவது எடுக்கலாம் என எதிர்பார்த்திருந்த போதிலும், அவரை எந்தவொரு அணியும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், லசித் மாலிங்கவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்க அவ்வணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, மாலிங்கவின் எதிர்காலம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில்,
”தற்போதைய நிலையில், இலங்கை டி-20 அணிக்கு லசித் மாலிங்க மிகவும் அவசியமான வீரர். எனினும், அண்மைக்காலமாக நடைபெற்ற டி-20 போட்டிகளில் நாம் அவரை வேண்டுமென்றே அணியில் இருந்து நீக்கவில்லை.
ஆனால், தற்போது நடைபெற்றுவருகின்ற ஐ.பி.எல் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற பந்துவீச்சாளராக இருந்தால் அவர் மாகாண மட்டப் போட்டிகளை புறக்கணிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. அதற்கு நாம் தாராளமாக அனுமதி வழங்குவோம். ஆனால் அவர் பின்வரிசையில் உட்கார்ந்து கொண்டு போட்டிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பாராயின் தேர்வாளர்களுக்கு அவரை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி-20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய மாலிங்க, தனது வழமையான போர்முக்கு திரும்பியிருந்தாலும், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவே செயற்பட்டு வருகின்றார்.
எனவே, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை அணிக்காக தொடர்ந்து விளையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற மாலிங்க, ஐ.பி.எல் தொடரை கைவிட்டு இன்று முதல் இடம்பெறும் மாகாண மட்ட 50 ஓவர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
ஆனால், கடந்த 21ஆம் திகதி மாலிங்க தனது டுவிட்டர் தளத்தில் இலங்கை அணியில் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர் கருத்து தெரிவிக்கையில், ”2017இல் உள்ளூரிலும், சர்வதேசப் போட்டிகளிலும் அதிகளவு டி-20 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக நான் இடம்பிடித்தேன். ஆனால் தேர்வாளர்கள் என்னை தொடர்ந்து அணியிலிருந்து புறக்கணித்து வந்தனர். இதுதொடர்பில் நான் பல தடவைகள் தேர்வாளர்களிடம் வினவியிருந்தேன். அப்போது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
உண்மையில் தற்போது நான் மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றேன். எனவே, எதிர்வரும் 27ஆம் திகதி வரை நான் மும்பை அணியுடன் இருப்பேன். அதன்பிறகு நாடு திரும்பி மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்து தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் தெரிவித்திருந்தார்.