டச்சு மொழியில் குச்சி என்று பொருள்படும் கிரிக் என்ற வார்த்தையில் இருந்து கிரிக்கெட் என்ற பெயர் வந்திருந்தாலும் இந்த விளையாட்டு எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.
இருப்பினும் இங்கிலாந்தில் 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் பெரியவர்களால் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் உலகின் மற்ற இடங்களுக்கும் பரவியது.
அதே வேளையில் கிரிக்கெட்டை ஒத்த வடிவில் இறு வேறு அளவுகளை கொண்ட குச்சிகளை வைத்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறுவர்களால் கிட்டிபுல் விளையாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் இந்த விளையாட்டு கில்லி தாண்டு, குச்சி கம்பு, சில்லாங்குச்சி, கரக்குட்டி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஆங்கிலேயர்களின் கால் மிதி ஆதிக்கம் மற்றும் ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியால் உலகின் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் முதல் சர்வதேச போட்டி 1844-ல் நியூயார்க் நகரில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே நடைபெற்றதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளது.
இருந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த இருநாடுகளும் தற்போது பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிகாலத்தில் முடிவு தெரியும் வரை விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டிகள் காலம் கருதி முதலில் 6 நாட்களாக வரையறுக்கப்பட்டு பின்னர் 5 நாட்கள் என தற்போதைய வடிவத்தை பெற்றது.
கால்பந்து மோகம் உலகில் தீயாய் பரவி இருந்த நிலையில் கிரிக்கெட்டையும் அவ்வாறு பிரபலபடுத்தலாம் என்ற நோக்கில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்காஆகிய நாடுகளுக்கு இடையே 1912-ம் ஆண்டு முத்தரப்பு டெஸ்ட் போட்டி தொடர் நடத்தப்பட்டது.
இருப்பினும் பாரம்பரியமிக்க ரசிகர்களால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விருப்பப்பட்டாலும் கால்பந்துக்கு இருந்த மோகம் கிரிக்கெட்டுக்கு அப்போது இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் 1962-ம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புது முயற்சியாக இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஓருநாள் தொடருக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் 1971-ம் ஆண்டில் மெல்போர்னில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டதால் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்த ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அந்த இரு அணிகளும் பங்கேற்ற ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டது.
இதுவே சர்வதேச அளவிலான முதல் ஒருநாள் போட்டியாகும். 1 ஓவருக்கு 8 பந்துகள் வீதம் 40 ஓவர்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டிக்கு கிடைத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இதனை பிரபலபடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியே ஒருநாள் உலககோப்பை தொடர் ஆகும்.
முதல் ஒருநாள் உலககோப்பை தொடர் நடத்தும் முன்னர் பரிசார்த்த முயற்சியாக 1973-ம் ஆண்டில் மகளிர்க்கான சாம்பியன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்று 7 நாடுகளுக்கு இடையே ரவுண்ராபின் முறையில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது.
ரசிகர்களின் மத்தியில் இந்த தொடர் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் உலககோப்பையை 1975-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடரும்
செய்தி உதவி லங்காபுரி