ColourMedia
WhatsApp Channel
Homeமுகப்புஉலகக் கோப்பையில் முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி

உலகக் கோப்பையில் முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி

0Shares

லாகூர்: பாகிஸ்தான் அணியை மேம்படுத்த அந்நாட்டு முன்னாள் வீரர்களின் உதவியை பெற பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் 22-வது லீக் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக விரட்டியது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆப்கன் வென்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 5-வது இடத்திலும், ஆப்கன் 6-வது இடத்திலும் உள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான், அதன்பின் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கனிஸ்தான் என அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ஹாட்-ட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது. இதனால் தொடரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தொடர் தோல்விகளை சந்தித்துவரும் பாகிஸ்தான் அணியை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு முன்னாள் வீரர்களின் ஆலோசனையை பெறத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தற்போதைய தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் வீரருமான இன்சமாம் உல் ஹக் மற்றும் முன்னாள் வீரர்கள் முகமது யூசுப் மற்றும் ஆக்கிப் ஜாவேத் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் லாகூரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அவர்களிடம் பாகிஸ்தான் அணியை மேம்படுத்த உதவ வேண்டும் என ஜகா அஷ்ரப் கோரிக்கை வைத்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், மற்ற முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் மற்றும் உமர் குல் போன்றோர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனையைப் பெறவும், அவர்களை அணிக்கு உதவ அழைப்பு விடுக்கவும் ஜகா அஷ்ரப் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

“பாகிஸ்தான் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்களான இவர்களின் கிரிக்கெட் குறித்த அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் அணியை மேம்படுத்த நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். இதன்மூலம், எதிர்காலத்தில் அணியில் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என நம்புகிறோம்” என ஜகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments