உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
இந்தியாவின் முன்னாள் நட்சத்த வீரர் சச்சின் டெண்டுல்கார் உலகக்கிண்ணத்தை மைதானத்திற்கு எடுத்து வந்திருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் தமைதாங்கியதுடன், நியூசிலாந்து அணியை டொம் லதம் வழிநடத்தினார்.
இங்கிலாந்தின் முதல் இரண்டு விக்கெட்களும் 64 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.
ஹரி புரூக் 16 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றார். ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களை பெற்றனர்.
ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் மெட் ஹென்ரி 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்த நிலையில், 282 ஓட்டங்களை பெற்றது.
283 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது.
சம் கரணின் பந்துவீச்சில் வில் யங் ஓட்டம் ஏதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கொன்வேயுடன் களமிறங்கிய 23 வயதான ரச்சின் ரவிந்திர ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றி இலக்கினை நோக்கி கொண்டு சென்றது.
இவர்கள் இருவரும் இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்காக 273 ஓட்டங்களை பெற்றனர்.
உலகக்கிண்ண வரலாற்றில் இரண்டாவது விக்கெகட்டுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகக்கூடிய ஓட்ட இணைப்பாட்டம் இதுவாகும்.
டெவோன் கொன்வே 83 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றதுடன், இம்முறை உலகக்கிண்ண தொடரில் பெற்றுக்கொண்ட முதல் சதம் இதுவாகும்.
இதன் பின்னர் ரச்சின் ரவிந்திர சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்தார்.
டெவோன் கொன்வே ஆட்டமிழக்காமல் 152 ஓட்டங்களை பெற்றதுடன், ரச்சின் ரவீந்திர ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை பெற்றார்.
82 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து வெற்றி இலக்கினை அடைந்தது.
ரச்சின் ரவிந்திர ஆட்டநாயகனாக தெரிவானார்.