ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் 20 வது லீக் போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் சின்ன காய்ச்சல் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் கண்டுள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் சதம் அடித்து மிரட்டினார். அதே ஆக்ரோஷத்தை இந்த ஆட்டத்திலும் காட்டுவார் என எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் பீல்டிங்கின் போது காயமடைந்தார் அம்பதி ராயுடு. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக, முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அதோடு, தோனி, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், பிராவோ என சென்னை அணியில், பேட்டிங் ஸ்ட்ராங்.
ஐதராபாத் அணியின் பலம், பவுலிங். ரஷித் கான், கவுல், புவனேஷ்வர்குமார், ஸ்டான்லேக் ஆகியோர் சிறப்பாக ஆடி விக்கெட் வீழ்த்தி வருகிறார்கள். சென்னை அணியின் டாப் ஆர்டர்களை சீர்குலைக்க அவர்கள் வியூகம் வகுத்திருப்பார்கள். இந்த ஐபிஎல்-லில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து வந்த ரஷித் கானை, கடந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் பந்தாடிவிட்டார். இதனால் சென்னை வீரர்களும் அவரின் பந்தை பதம் பார்க்க தயங்கமாட்டார்கள். அதிலும் ஸ்பின் பந்துகளை விளாசுவது சுரேஷ் ரெய்னாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ரஷித் கான் பந்துகளை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
பேட்டிங்கில் தவான், கேப்டன் வில்லியம்சன், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா ஆகியோர் பலமாக இருக்கின் றனர். கடந்த போட்டியின்போது காயமடைந்த தவான், காயம் குணமாகாததால் இந்தப் போட்டியில் ஆடுவது சந்தேகம். இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.