நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாட ளாவிய ரீதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக் கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் முப்படைகளின் உதவியுடன் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுக்குமாறும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு தென்கொரியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் நிலைமைகளை கேட்டறிந்த பின்னர் தென் கொரியாவில் இருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.
மேலும் பாதுகாப்பு படைகளின் பூரண உதவிகளை எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளும் ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினைக் கொண்டு முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று சீரற்ற காலநிலையினால் கடலில் சிக்கியுள்ள மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்துமாறும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்ப உதவியாக 10 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறும், நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண மற்றும் சுகாதார உதவிகளை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் முழுமையாக பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாவை வழங்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யுமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.