கட்டுரை- தி.கஸ்தூரி
இயேசு கிறிஸ்து மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து காப்பாற்ற மானுடனாய் உலகிற்கு வந்த நன்நாளே இன்றுவரை மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம் தான் அதிலும் நம் கண் முன் வருபவர் நத்தார் தாத்தா.
“ரெயின்டீர்” கலைமானுடன் பனிச்சறுக்கு வண்டியில் வட துருவத்திலிருந்து குறும்பு கொப்பளிக்கும் கண்களோடு “ஹோ, ஹோ, ஹோ” என்று சத்தமாக ஒலி எழுப்பி சிரித்த முகத்தோடு, பருத்த உடல், வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிற விலங்கின் உரோமத்தினாலான கழுத்துப்பட்டி, சிவப்பு நிறத்தொப்பி, கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் வருபவர் தான் நாம் அனைவரும் விரும்பும் நத்தார் தாத்தா / கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ் ( SANTA CLAUS ) ஆவார்.
புனித நிகோலாஸ் நினைவாகவே சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார் என்றும், வரலாற்றில் இவருடன் தொடர்புடைய ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு கதாபாத்திரம் , அம்புலிமாமா கதைப் போல சாண்டா கிளாஸும் வெறும் கற்பனைக் கதை என்றும் சொல்லப்படுகிறது.
ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதிலேயே பாலஸ்தீனத்திற்கும் எகிப்திற்கும் பயணம் மேற்கொள்ளும் அவர் கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார். செயின்ட் நிகோலாஸ் இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் தரும் இயல்புடையவராக இருந்துள்ளார்.
ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
நிகோலாஸ் இறந்த பின்னர் “மைரா” என்ற இடத்தில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கருணை உள்ளம் நிறைந்தவர் என்பதால் அவரது கல்லறைக்கு மக்கள் அதிகமாக வரத்தொடங்கினர்.
மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றதால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. பாரியில் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேராலயத்தில் இப்போதும் அவரது நினைவுச் சின்னங்கள் உள்ளன. காலம் உருண்டோடிவிட்டாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. அவரது பெயரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்கள் உருவாகின.
ரஷ்யாவும் கிரீஸும் அவரைத் தங்களது நாட்டு பாதுகாவலராக ஏற்றுக் கொண்டது. டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது.
“செயின்ட் நிகோலாஸ்” என்பது டச்சு மொழியில் “சின்டர்க்ளாஸ்” என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சாண்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர்
காலப் போக்கில், சமுதாயத்தில் தீமை செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும் நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப்படுத்தப்பட்டார்
1822ல் கிளமென்ட் மூர் என்பவர் “கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார் என்றும்…. 1823 ஆம் ஆண்டில், அரசியல் நையாண்டியுடன் கேலிச்சித்திரம் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவரால் எழுதப்பட்ட “புனித நிக்கோலசின் வருகை” என்ற பாடலில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டுள்ளதாதவும் சொல்லப்படுகிறது.
புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு – வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது நிஜம் தான். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் “அன்பின் திருவுருவமாக” கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். நாமும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவோம்.