நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு பன்சலை வீதியில் (அங்குறுகாரமுள்ள விகாரை ) அமைந்துள்ள வீடொன்றில் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேட்கொண்டபோது அங்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப்பொருட்கள் (Face Whiting Cream) உட்பட அவைகள் பொதி செய்யப்பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் ,ஸ்டிக்கர்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது .
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர் .
சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்தியதில் சந்தையில் காலாவதியான Cream களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து அவைகளை புதிய டப்பாக்களில் அடைத்து வெளிநாட்டில் தலைசிறந்த அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாகவும் காலாவதி திகதியை தாங்கள் விரும்பியது போன்று பொறித்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரிவித்துஉள்ளார் .
குறித்த பொருட்கள் நீர்கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பெரும்பகுதிகளில் உள்ள அழகு சாதனப்பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிக குறுகிய காலத்தில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேட்கொள்கின்றனர்.
சந்தேகநபர் நாளைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.