Site icon Colourmedia News

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர் திசர பெரேரா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உப தலைவரும் சர்வதேச கிரிக்கெட்டிற்கான பொறுப்பாளருமான K. மதிவனன், இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா, தெரிவுக் குழுவின் தலைவர் கிரேம் லப்ரோய், இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை அணியை வழிநடாத்திய உபுல் தரங்கவின் தலைமையில் தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான ஒரு நாள் தொடர்களில் இலங்கை அணி தலா 5-0 என வைட் வொஷ் தோல்விகளை சந்தித்தது. அதன் பின்னர் அண்மையில் இடம்பெற்று முடிந்த இந்திய அணியுடனான ஒரு நாள் மற்றும் T-20தொடர்களுக்காக திசர பெரேரா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அணி அடுத்து பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்காக (இலங்கை, பங்களாதேஷ், ஜிம்பாப்வே) புதிய பயிற்றுவிப்பாளரின் வழிநடாத்தலின்கீழ் அங்கு செல்லவுள்ளது.

எனவே, தற்போதைய நடவடிக்கைக்கு அமைய குறித்த தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சை மீண்டும் நியமிப்பதற்கு அல்லது டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமாலை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால ”குறித்த இடைவெளியை நிரப்புவதற்கு அஞ்செலோ மெதிவ்ஸ் அல்லது தினேஷ் சந்திமாலை நியமிப்பதற்கு பரிசீலிப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் குறித்த சந்திப்பின்போது தெரிவித்தார்” என்றார்.

எனினும் நம்பகமான தகவல்களுக்கு அமைய 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள்வரை அஞ்செலோ மெதிவ்சே அணியை தலைமை ஏற்று நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, மெதிவ்சின் தலைமையின்கீழ் 98 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 47 வெற்றிகளையும் 45 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இறுதியாக தமது சொந்த மண்ணில் இலங்கை அணி 3-2 என ஜிம்பாப்வே அணியிடம் ஒரு நாள் தொடரை இழந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவர் தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.

மறுமுனையில், தினேஷ் சந்திமாலின் தலைமையில் இலங்கை டெஸ்ட் அணி ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி கொண்டது. எனினும், சந்திமால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசிக்கத் தவறி வருகின்றார்.

எவ்வாறிருப்பினும் தற்பொழுது மெதிவ்ஸ் உபாதையில் இருக்கின்ற அதேவேளை, சந்திமால் ஒரு நாள் அணியில் பிரகாசிக்காத ஒரு நிலைமை நிலவுகின்றது. அவற்றுக்கு மத்தியில் இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான புதிய தலைவர் யார் என்பது குறித்த தகவல் எதிர்வரும் 9ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இலங்கை அணியின் அடுத்த தலைவராக யார் தகுதியானவர்? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

Exit mobile version