நாட்டின் பிரச்னையில் மௌனம் ஏன்?
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேன, இலங்கையில் இரண்டு பிரதமர்கள் இருக்கும் நெறியற்ற நடைமுறையை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை அதன் தலைவரின் ஆலோசனையைப் பெறாமலேயே தனது விருப்பத்திற்கேற்ப ஒத்திவைத்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து தெருச்சண்டை போல அங்கு கலவரத்தை உண்டாக்கி, அதன் தலைவர் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவரை இருக்கையில் அமர விடாமல் ராஜபட்ச ஆதரவாளர் கூத்தடித்தது, இந்த கூத்துக்கு மைத்ரிபால சிறீசேனா துணை போனது – இவற்றையெல்லாம் உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது.
ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக நாடளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்கீழ், இருமுறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அம்முடிவை ஏற்க சிறீசேனாவும் ராஜபட்சவும் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றனர்.
இதற்கு சிறீசேன ஆதரவு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இத்தனைக்குப் பிறகும் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமர் பதவியில் நியமிக்க மாட்டேன் என்று சிறீசேனா திட்டவட்டமாகக் கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் அமரக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மைத்ரிபால சிறீசேனா தொடர்ந்து செயல்பட்டு வந்ததற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கிறிஸ்வான் ஹோலன், அதிபர் சிறீசேனாவுக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
அதில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீங்கள் பதவி நீக்கம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை ஏற்க மறுத்ததும் மிகுந்த வருத்தமளிக்கின்றன. இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மைத்ரிபால சிறீசேனா, அதிபராக இருந்து, ராஜபட்சவுக்கு மகுடம் சூட்டினாலும், சிறீசேனாவை ராஜபட்ச பெரிதாக மதிக்கவில்லை. சிறீசேனாவும், ராஜபட்சவும் கலந்து கொண்ட பொது நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சிறீசேனாவின் கையை ராஜபட்ச அலட்சியமாக தட்டிவிட்டார். இதனைக் கவனித்தபோது, ராஜபட்ச, தனக்குக் கீழே அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சராக சிறீசேனா இருந்தபோது அவரை எப்படி நடத்தினாரோ அந்த அளவிலேயே இப்போதும் அவர் அதிபர் என்றுகூட நினைக்காமல் நடத்துகிறார் என்பது புரிந்தது.
சிறீசேனா-ராஜபட்ச இடையேயான உறவு தற்போது விரிசலடையத் தொடங்கியுள்ளது என்பதே உண்மை. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியை சேர்ந்த அனுதாபிகள் சந்திரிகாவுடன் இணைந்துவிட்டனர். ரணிலை விரட்ட நினைத்த சிறீசேனா இப்போது தனிமரமாக உள்ளார். இப்படிப்பட்ட நிலையில், இலங்கையில் மகிந்த ராஜபட்சவின் அதிபர் வேட்பாளராக எதிர்காலத்தில் சிறீசேனா இருக்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சமல் ராஜபட்ச இருக்கலாம் என்றும் செய்திகள் வருகின்றன.
இப்படி தினமும் இலங்கையில் கேலிக்கூத்துகள் நடக்கின்றன. சீனா மட்டும் அவர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கின்றது. நீதிமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும், அரசியல் கோட்பாடுகளையும் மதிக்காத ஒருவருக்கு சீனா எதற்கு ஆதரவு கொடுக்கிறது என்று இந்தியா யோசிக்கவில்லை. அங்கு ஜனநாயகமும் ஜனநாயகத்தின் கூறுகளும் மதிக்கப்படாமல் இருக்கின்ற அசாதராண நிலை உள்ளது.
மான்டெஸ்கியூவின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டின்படி, நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சி அதிகார மையம் ஆகியவை, தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலைகளில் இயங்க வேண்டுமென்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. கடந்த ஒரு மாத காலமாக பிரெஞ்சு 16-ஆம் லூயியைப் போல சர்வாதிகாரப் போக்கில் இலங்கை அதிபர் சிறீசேனா, தானே அரசு என்பது போல நடந்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள், இலங்கை அதிபரின் இந்த போக்கைக் கண்டித்துள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட்டிலும் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டு, இலங்கை அதிபர் ஜனநாயக நெறிமுறையிலிருந்து வழுவாமல், அதை முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ராஜபட்சவுடன் முள்ளிவாய்க்கால் போரை நடத்திய மைத்ரிபால சிறீசேனாவை, நல்லவர் என்று நம்பி, ராஜபட்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்று சிறீசேனாவுக்கு வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி பாராட்டாமல், மீண்டும் ராஜபட்சவுக்கே அவர் மகுடம் சூட்டியதை வரலாறு மன்னிக்காது.
நன்றி இந்திய ஊடகம்
dinamani