Site icon Colourmedia News

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட செய்தி

இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தங்கள் வசம் இருப்பதாக இதன்போது தெரிவித்த கட்சித் தலைவர்கள், அதனை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதற்குரிய கௌரவத்தினை அளிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தினை நீக்குதல் மற்றும் மீண்டும் நாளை அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன். வாக்கெடுப்பினை பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த கட்சித் தலைவர்கள் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறே பாராளுமன்றத்தினுள் அமைதி நிலையை உறுதி செய்து, ஜனநாயகம் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version