சமூகத்தின் சில பிரிவினர் கட்டுக்கதைகள் மற்றும் பீதியை உருவாக்கி மக்கள் வழிவதறிச் செல்ல முடியுமான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தாலும், பெரும்பாலானோருக்கு தொழில், வருமான வழிகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்பனவே தேவைப்படுவதால், சிங்கப்பூர் எப்போதும் பெரும்பான்மையினருக்கு நலன்களை வழங்கும் கொள்கையைப் பின்பற்றுவதாக சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இற்றைக்குப் பல தசாப்;தங்களுக்கு முன்பு அந்த நோக்கத்துடன் சிங்கப்பூர் இலங்கையிடமிருந்து பல முன்மாதிரிகளைப் பெற்றுக்கொண்டதாக சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினருடன் ஹெனொய் நகர பேன் பசுபிக் ஹோட்டலில் இன்று காலையுணவுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இலங்கையிடமிருந்து முன்மாதிரியைப் பெற்ற சிங்கப்பூர் தற்போது பரந்த முன்னோக்கிய பயணமொன்றை மேற்கொண்டிருந்தாலும், இலங்கை குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைச் செயற்படுத்தியமை காரணமாக பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பின்னடைவை எதிர்நோக்கியதாக சுட்டிக் காட்டிய இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பயணத்தை மாற்றியமைத்து இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகள் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தப்பட்டது. சமூக மற்றும் வெகுசன ஊடகங்கள் மூலம் நாகரீகமற்ற கோத்திரத் தன்மையுடைய, வீண்பேச்சுக் கொண்ட சமூகமொன்று உருவாகும் அபாயம் தொடர்பாக உலக முழுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஏற்பட முடியுமான சவால்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்வில் கருத்திட்ட முகாமைத்துவம், இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சமுத்திர அலுவல்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் சஷிகலா பிரேமவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்.