Site icon Colourmedia News

தி.மு.க. வின் தலைவராக மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக்கழகத்தின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் துரைமுருகன் தி.மு.க.வின் பொருளாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து. அக்கட்சியில் தலைவர் பதவி வெறுமையானது. குறித்த பதவிக்கும், செயல் தலைவராகவுள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தி.மு.க . வின் பொதுக்குழு இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கூடியது.

இதில், கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மேடையில்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் அண்ணாவின் புகைப்படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு பொதுச்செயலாளர் க.அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர் பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அன்பழகன் அறிவித்தார். அவரும் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version