கல்வி சுகாதாரம் மற்றும் தொடரூந்து ஆகிய மூன்று துறைகளையும் வரையறுக்கப்பட்ட சேவையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சரவை உபகுழுவுடன் தொடரூந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
புகையிரத தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் பின்னர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தொடரூந்து ஊழியர்களின் கோரிக்கைக்கு அமைய வேதன அதிகரிப்பினை மேற்கொண்டால் கல்வி மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்களும் வேதன அதிகரிப்பினை கோருவார்கள்.
மூன்று துறைகளும் ஒருங்கிணைந்த சேவையின் கீழ் காணப்பட்டமையே அதற்கு காரணம்.
ஆகையினால், முதல் கட்டமாக கல்வி, சுகாதாரம், தொடரூந்து திணைக்களங்கள் உள்ளிட்டவை வரையறுக்கப்பட்ட சேவைக்குள் (closed service) உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சேவைக்குள் உள்வாங்கி தற்சமயம் நிலவும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதென முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தொடரூந்து தொழிற்சங்க அமைப்புக்களும் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.