Site icon Colourmedia News

வயிற்று வலியால் துடித்த பெண்!! சத்திரச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ள அதிர்ச்சி விடயம் – படங்கள்

பெண்ணெருவரின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய முடி நவீன சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நவீன யுகத்தில் மனிதன் பல்வேறு விதமான நோய்களுக்கும் தாக்கங்களுக்கும் முகம் கொடுக்கின்ற வேளையில் மருத்துவத் துறை சார்ந்த சில விசித்திரமான நிகழ்வுகளும் இடம்பெறத்தான் செய்கின்றன.

அந்த வகையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண் ஒருவரின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் அடைத்திருந்த சுமார் ஒன்றரை கிலோ நிறையுடைய முடி நவீன சத்திரசிகிச்சை மூலம் அண்மையில் அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலையினுடைய பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மொகமட் சமிம் தனது முகநூல் பக்கத்தினூடாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

25 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் வித்தியாசமான முறையில் வாந்தி எடுத்த வண்ணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் வயிற்றில் கட்டி போல் தென்பட்டதும் Endoscopy மூலம் இரைப்பை பூராகவும் முடி அடைத்து காணப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது. (அளவு அதிகமென்பதால் Endoscopy மூலம் அகற்ற முடியாது.)

பின்பு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 1.5 கிலோ கிராம் எடையுள்ள முடி (airball) மீட்கப்பட்டது.

முடியானது இரைப்பை, முன் சிறுகுடல், சிறு குடல் வடிவில் வடிவமைக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.

இவர் பல நாட்களாக முடியை உட்கொண்டிருக்க வேண்டும். பொதுவாக மிருகங்களுக்கே இவ்வாறான முடி அடைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.

மனிதர்களில் இவ்வாறு முடியை உற்கொண்டு வருவது மிகவும் அரிது. மன நோயாளர்களே இவ்வாறு முடியை உட்கொள்கின்றனர்.

இலங்கையில் இவ்வாறான சத்திரசிகிச்சை இதற்கு முன் செய்யப்பட்டிருக்குமா என்பது கேள்விக் குறியான விடயமாகும். இதை Trichobezoar என குறிப்பிடுவர்.

முடியானது சமிபாடடையாது. அது வயிற்றினுள் அடைப்பட்டுக் காணப்படும் போது இரைப்பையில் அமில அரிப்புகள் காயங்கள், துவாரங்கள், சதையில் அழற்சி (Pancreatitis), தொடர்ச்சியான வாந்தி, வயிற்று வலி என்பன ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

கண்டுபிடிக்கத் தவறினால் உயிராபத்தும் ஏற்படலாம். இந்த மன நோயாளிக்கு அவருடைய இயல்பை மீட்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சரித்திரத்தின் முதல் சத்திர சிகிச்சை இது என தெரிவித்துள்ள அவர், இச்சத்திர சிகிச்சைக்கு உதவிய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் ஏ.எல்.எம்.ரகுமான் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகளை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதனூடாக ஒருவர் மன நோயாளியாக இருந்தாலும் அவர்களை வீட்டில் நன்றாக கவனிப்பது யாருக்காவது வயிற்று நோவு சத்தியுடன் இருந்தால் Endoscopy மூலம் காரணத்தை கண்டறிவது போன்றன நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் தூர இடங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டி இருந்த சேவைகளை இப்போது நவீன சத்திர சிகிச்சை முறை மூலமாக பொது சத்திர சிகிச்சை நிபுணர் மொகமட் சமிமின் சிறந்த ஆளுமையுடனும் சேவை நலனுடனும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளமை தமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Exit mobile version