ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடுவதற்கு கைகோர்த்த அனைத்து முஸ்லிம்களுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த பெருநாள் தினமாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்;ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவது கடமையாக ஹஜ் காணப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைச் செலவழித்து மக்கமா நகருக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இறைவன் மீதுள்ள நம்பிக்கை இங்கு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
அனைத்து பேதங்களையும் மறந்து உலகின் நாலா திசைகளிலிருந்தும் வருகை தரும் முஸ்லிம் பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த வழிபாடு உலக சமதானத்திற்காக சமயக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் சர்வதேச மாநாடாகவும் கருதப்படுவதுடன், இதன் மூலம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தொடர்பாக உலகிற்கு வழங்கப்படும் செய்தி மிகவும் முக்கியமானது. இப்றாஹிம் நபியவர்கள் தனது மகனை இறைவனுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தமை ஹஜ் பெருநாள் தினத்தன்று முக்கியமாக நினைவுகூரப்படுகிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்;ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.