Site icon Colourmedia News

அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆப்பிள் பங்குகள் அதிகரிக்க துவங்கின.

அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,87,05,50,00,00,000.00) மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.

2007-ம் ஆண்டு முதல் ஐபோன் விற்பனை துவங்கிய போது, ஆப்பிள் நிறுவன பங்குகள் சுமார் 1,100% அதிகரித்தது. கடந்த ஆண்டு மும்மடங்கு அதிகரித்தது. 1980-ம் ஆண்டு பங்குச் சந்தையில் இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 50,000% அதிகரித்து இருக்கிறது.

1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் காரேஜில் துவங்கிய ஆப்பிள் நிறுவனம், துவக்க காலத்தில் தனது மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரபலமாக அறியப்பட்டது. அதன் பின் ஆப்பிள் ஐபோன்கள் அந்நிறுவன பொருளாதாரத்தை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து டிம் குக் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று நிறுவனத்தின் லாபத்தை இருமடங்கு அதிகரிக்க செய்தார். 2006-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் 2000 கோடி டாலர்கள் வருவாயும், லாபமாக 200 கோடி டாலர்களை பெற்றது.

கடந்த ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவன விற்பனை 11 மடங்கு 22,900 கோடி டாலர்களாக அதிகரித்து, இதன் மொத்த வருவாய் இருமடங்கு அதிகரித்து 4840 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பொது வெளியில் அறிவிக்கப்பட்ட, அமெரிக்காவின் அதிக லாபம் பெறும் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது

Exit mobile version