தன்னுடைய சாதனையை விராட் கோலி தவிடுபொடியாக்குவார் என்று தாம் நம்புவதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அற்புதமான ஆட்டக்காரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ20 ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் மொத்தமாக 2,818 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார் கோலி. இதன்மூலம், ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இப்பட்டியலின் முதல் இடத்தில் 2,868 ஓட்டங்களுடன் சங்கக்காரவும் 2,833 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்கும் உள்ளனர்.
“இந்த ஆண்டு நிறைவுக்குள் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் இ20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்றிருப்பதால், இந்த ஆண்டு அவர் மேலதிகமாக ஒரு ஓட்டத்தையும் பெறப்போவதில்லை. இதனால், அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் எனது பெயர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும்.
“ஆனால் அழகான, திறமையான, வித்தியாசமான ஆட்டக்காரரான கோலி இதே விதமாகத் தொடர்ந்து ஆடினால் எனது சாதனையை அடுத்த வருடம் நிச்சயம் முறியடிப்பார். அதற்கு அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என்று தனது சாதனைகளையும் தானே தகர்ப்பார்” என்று குமார் சங்கக்கார கூறியுள்ளார்.