தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவெடுத்ததை அடுத்து, கூட்டமைப்பு பலவீனமடைவது போன்ற தோற்றப்பாடு காணப்பட்டது.
எனினும், அடுத்த சில நாட்களிலேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். – தமிழ்க் காங்கிரஸ் கூட்டணி முயற்சி முளையிலேயே கருகிப் போனதும், ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரதர் அணி போன்றவற்றுடன் இணைந்து செயற்படுவதற்கான முன்னாயத்தங்களில் இறங்கியதும், கூட்டமைப்பு மீண்டும் பலமடைவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கச் செய்தது.
எனினும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப்பத்தி எழுதப்படும் போது, ரெலோவும், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. புளொட்டும் அதிருப்தி நிலையில் இருக்கிறது.
எனினும், இரண்டு கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு புறத்தில் மாற்று அணிகளும் அவர்களை வளைத்துப் போடுவதில் குறியாகச் செயற்படுகின்றன.
இடைக்கால அறிக்கையைக் காரணம் காட்டியே தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை ஈ.பி.ஆர்.எல்.எவ். எடுத்திருந்தது. அதனை ஒரு கொள்கை சார்ந்த முடிவு போலவும் காட்டிக் கொண்டது.
எனினும், ரெலோ அவ்வாறு வெளியேறவில்லை. தமிழரசுக் கட்சியுடனான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில் தான் அதிருப்தியுடன் இந்த முடிவை எடுத்திருந்தது.
வெளியேறும் முடிவு எடுத்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரெலோ பொதுச்செயலர் சிறிகாந்தா, தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்பற்ற- விடாப்பிடியான போக்கில் இருப்பதால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாகவே, தமிழரசுக் கட்சியுடன் தனியாகப் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது ரெலோ.
ஆனாலும், கடைசியில் அந்தக் கட்சியே தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்றொரு தகவலும் உள்ளது,
ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்து அமைக்கும் கூட்டணியில் இணைந்து கொள்வதற்காகவே, ரெலோ இந்த முடிவை எடுத்தது என்றொரு கதையும் உள்ளது.
எனினும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் ரெலோ அடுத்தகட்டம் குறித்த முடிவை வெளியிடவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி பிரதான பங்காளி. கூட்டமைப்பின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியும் கூட. அதைவிட கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிலேயே பலமானதும் இது தான்.
தமிழரசுக் கட்சி ஏனைய பங்காளிக் கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையிலும், உதாசீனம் செய்யும் வகையிலும் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலங்களில் இருந்தே வந்திருக்கிறது.
சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்டமைப்பை விட்டு வெளியேறியதும் கூட அவ்வாறானதொரு காரணத்தினால் தான். ஆனால் அந்தக் கட்சி கொள்கை முரண்பாடு என்றே நியாயப்படுத்தியிருந்தது.
எனினும் ரெலோ அவ்வாறு காரணம் கூற முடியாது. தமிழரசுக் கட்சியை குற்றம்சாட்டிக் கொண்டு வெளியேறியிருக்கிறது. ரெலோவின் இந்த முடிவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த எதிர்காலத்தைப் பாதிக்குமா அல்லது வரும் உள்ளூராட்சித் தேர்தல் வரை தான் நீடிக்குமா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் குழப்பங்கள், கூட்டமைப்புக்கு சாதகமான ஒரு விடயமாக இருக்காது. ஏனென்றால் ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியிருக்கிறது. ரெலோவும் வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் இப்போது புளொட் தான் எஞ்சியிருக்கிறது. புளொட்டும் கூட தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் பதவிகளையும், நிர்வாகத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வலுவான ஆசனப் பங்கீட்டை எதிர்பார்க்கிறது.
புளொட்டின் கோரிக்கையும் கூட தமிழரசுக் கட்சியினால் சாதகமாகப் பரிசீலிக்கப்படக் கூடிய நிலை இல்லை.
இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் தமிழரசுக் கட்சியாகச் சுருங்கிப் போய் விடும் நிலை தோன்றி விடும் சூழலையும் அவதானிக்க முடிகிறது.
வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி கொண்டு வந்த போதே, அந்தக் கட்சி தனித்து விடப்பட்டிருந்தது. ஈபி.ஆர்.எல்.எவ். புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் முதலமைச்சருக்கு ஆதரவாக நின்றன. அப்போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து விடுமோ என்ற நிலையும் ஏற்பட்டது. எனினும், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்பட்டதையடுத்து, அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
எனினும், உள்ளூராட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்வதற்கு தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது என்ற குற்றச்சாட்டு பலமாகவே இருந்து வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், கிராமிய மட்டத்தில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்துப் பலப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடம், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறதா என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர், கூட்டமைப்பாக போட்டியிடவே விரும்புகிறோம், ஒன்றுமையாக செயற்படுவதே தமது நோக்கம் என்று கூறியிருந்தார்.
இப்போது தமிழரசுக் கட்சி தானாக தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்காத போதிலும், ஏனைய பங்காளிக் கட்சிகளின் அடுத்தடுத்த முடிவுகள் அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் நகர்த்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளொட்டும் ரெலோவும் ஆசனப்பங்கீட்டில் அதிகளவு இடங்களைக் கோருவதாக தமிழ் அரசுக் கட்சியினர் மத்தியில் ஒரு கருத்து இருந்தது,
அதேவேளை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காமல் பெருமளவு இடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைகிறது என்பது பங்காளிக் கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. அது மாத்திரமே பிரச்சினைக்குரிய விடயமாகத் தெரியவில்லை.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவுக்கும், புளொட்டுக்கும், எங்கே தமிழரசுக் கட்சி தமக்குச் செல்வாக்குள்ள பகுதிகளுக்குள்ளேயும் ஆதிக்கம் செலுத்தி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
பங்காளிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட பலரையும் தம்பக்கம் இழுத்துக் கொண்ட வரலாற்றை தமிழரசுக் கட்சி கொண்டிருப்பதும் இந்த அச்சத்துக்கு ஒரு காரணம்.
அண்மையில் கூட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியில் போட்டியிட்டு வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட து.ரவிகரனை தமிழரசுக் கட்சி தம் பக்கம் இழுத்திருந்தது.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பன, வவுனியா, மன்னார் மாவட்டங்களைத் தமது கோட்டையாக கருதிக் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு மாவட்டங்களும் 1990இல் இருந்து, இராணுவக் கட்டுப்பாட்டில், இருந்து வந்தவை. அங்கு இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களாகவும், அரசியல் கட்சிகளாகவும் இவை செயற்பட்டவை.
தீவகத்தில் ஈ.பி.டி.பி. 1990இற்குப் பின்னர் செல்வாக்குப் பெற்றதைப் போலவே, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எல்.எவ். என்பன, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இவ்வாறு தான் செல்வாக்குப் பெற்றன.
அந்தச் செல்வாக்கை தமிழரசுக் கட்சி உடைத்துக் கொண்டு போய் விடுமோ என்ற பயம், ரெலோ, புளொட்டுக்கு உள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் இங்கு தமிழரசுக் கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்தால், அடுத்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமக்கு அதிக இழப்புகள் ஏற்படும் என்ற கவலை இந்தக் கட்சிகளுக்கு உள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இழந்ததைப் போன்ற நிலை வன்னியில் தமக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் கூட, தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ரெலோ தயங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனித்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை பங்காளிக் கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்று தெரியவில்லை.
ஆனாலும், ஒருவேளை இது தமிழரசுக் கட்சிக்கு சாதகமாக அமைந்து விட்டால், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளின் நிலை படு பரிதாபமாகி விடும்.