Site icon Colourmedia News

இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள் விடுதலை புலிகளுடையதா…..? (படங்கள்)

இலங்கையின் இருந்த ஆயுத குழுக்கள்  பயன்படுத்திய ஆயுத குவியல், இந்தியாவின் ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர், கண்ணிவெடிகள் என தோண்டத்தோண்ட ஆயுதங்கள் கிடைத்ததால் அந்தப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது இந்த ஆயுத பெட்டிகள் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பழைய ஏகே 47 ரக துப்பாக்கிகளுக்குரியவை என்று கூறப்படுகிறது.

இவற்றை விடுதலைபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என அந்தநாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) திங்கட்கிழமை இரவு 9 மணி வரையில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகளுடன் 4 பெட்டிகள் எடுக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று, பனைக்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா ஆதரவோடு இலங்கையை சேர்ந்த தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோந்த தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

அந்த கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.

அப்போது இந்த பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத குவியல்களாக இவை இருக்கலாம் என இந்திய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version