ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் வெளிவந்த சிறப்புக்கட்டுரை
கோத்தாபய ராஜபக் ஷ இராணுவ ஆட்சியை கடும்போக்கு ஆட்சியை விரும்புபவர். அதனையே தனது அடையாளமாக நிரூபிக்கவும் எத்தனிப்பவர். இது அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால் தான், அவரது அந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, அவரை மேல் மட்டத்துக்குக் கொண்டு வர முனைகிறார்கள்.
ஆனால், அரசியல் என்பது வேறு. அதற்கும் இராணுவ ஆட்சிக்கும் ஒருபோதும் ஒத்துப்போகாது. ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிக்கின்ற வகையிலான, பண்புகளைக் கொண்டவர் களுக்குத்தான் அரசியல் பொருத்தமுடையது
ஹிட்லராக மாறி, இராணுவ ஆட்சியின் மூலம், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண. வெதருவே உபாலி தேரர் வழங்கிய ஆசி, பெரும் பரபரப்பை தோற்றுவித்திருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மிரிஹானயில் உள்ள வீட்டில் நடந்த சமய நிகழ்விலேயே, அனுநாயக்க தேரர் இவ்வாறு ஆசி வழங்கியிருக்கிறார்.
மூன்று பௌத்த பீடங்களினதும் உயர் பிரதிநிதிகளும், மஹிந்த ராஜபக் ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக் ஷ போன்றவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே, இராணுவ ஆட்சி, ஹிட்லர் போன்ற சொற்களின் ஊடாக கோத்தாபய ராஜபக் ஷவுக்கு உசார் ஏற்றும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனினும், ஊடகங்களில் வெளியானவை போன்று, அனுநாயக்கர் அவ்வாறு கூற வில்லை என்றும், “அவர்கள் உங்களை ஹிட்லர் என்று அழைத்தால், அப்போது ஹிட்லராக மாறி நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்றே அஸ்கிரிய அனுநாயக்கர் ஆசி வழங்கியதாகவும் இன்னொரு தகவலும் உள்ளது.
கோத்தாபய ராஜபக் ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா அதற்கான தகுதிகளை அவர் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவரை ஒரு கடும்போக்குவாத ஆட்சியாளராக உருவாக்குவதில் இன்னொரு தரப்பு ஈடுபட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
முன்னைய ஆட்சிக்காலத்தில் கோத்தாபய ராஜபக் ஷ அசைக்க முடியாத இரும்பு மனிதராகவே உலா வந்தவர். ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே, பல வேளைகளில் கோத்தாபய ராஜபக் ஷவின் பேச்சுக்கு மடங்கிப் போனதாக கூறப்படுவதுண்டு.
சில சந்திப்புகளின் போது, இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக் ஷ வருகிறார் என்றதும் பேச்சை மாற்றிக் கொண்டதாகவும் கூட பலரும் கூறியிருக்கிறார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷ இராணுவ ஆட்சியை ஒத்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்த நிறைவேற்று அதிகாரம் என்ற கவசத்தை, அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கொழும்பு நகரை அழகுபடுத்தியது உள்ளிட்ட சில விடயங்களில் அவரது கடும்போக்கும், எடுக்கும் முடிவுகளை பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நடைமுறைப்படுத்தும் குணமும், பலராலும் ஆதரிக்கப்படுகிறது.
ஆனால், நடைமுறை அரசியலில் அவர் ஒரு ஜனநாயக ஆட்சியை நடத்தக் கூடிய இயல்புடையவர் அல்ல என்பது, அவரது பெரும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
கோத்தாபய ராஜபக் ஷ இராணுவ ஆட்சியை கடும்போக்கு ஆட்சியை விரும்புபவர். அதனையே தனது அடையாளமாக நிரூபிக்கவும் எத்தனிப்பவர். இது அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால் தான், அவரது அந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, அவரை மேல் மட்டத்துக்குக் கொண்டு வர முனைகிறார்கள்.
ஆனால், அரசியல் என்பது வேறு. அதற்கும் இராணுவ ஆட்சிக்கும் ஒருபோதும் ஒத்துப்போகாது. ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிக்கின்ற வகையிலான, பண் புகளைக் கொண்டவர்களுக்குத் தான் அரசியல் பொருத்தமுடையது.
மஹிந்த ராஜபக் ஷவை அமெரிக்கா எதேச்சாதிகாரி என்று குறிப்பிட்டிருந்தாலும், அவர் தேர்தல்களை ஒழுங்காக நடத்தி, தான் ஜனநாயக ஆட்சியை நடத்துவதாக காட்டிக் கொண்டவர்.
ஆனாலும், அவரது ஆட்சியை, தனது முரட்டுத்தனமான இராணுவ போக்கில் நாட்டை வழிநடத்திச் சென்று, மேற்குலகினால் எதேச்சாதிகார ஆட்சி என்ற விமர்சனங்களை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் கோத்தாபய ராஜபக் ஷ.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போது, இவர் எடுக்கும் முடிவுகளே பெரும்பாலும் இறுதியானதாக இருந்து வந்தது. கடும்போக்கு வாதமும், இறுக்கமான இராணுவ நிர்வாகம் போன்ற கெடுபிடிகளும், இராணுவ ஆட்சி நடக்கும் நாடு போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியது. அதனைத் தான் மீண்டும் அஸ்கிரிய அனுநாயக்கர் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அனுநாயக்கர் மாத்திரமன்றி, கோத்தாபய ராஜபக் ஷவைச் சுற்றியிருப்பவர்களும் அதனைத் தான் விரும்புகிறார்கள்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ராஜபக் ஷவினருடன் அதிகம் ஒட்டிக் கொண்டு செயற்படும் கோத்தாபய ராஜபக் ஷவுடன் இணைந்து எலிய அமைப்பை உருவாக்கியதில் முன்னின்று செயற்பட்ட கலாநிதி தயான் ஜயதிலக அண்மையில் விடுத்த எச்சரிக்கை இதனைச் சார்ந்ததாகவே இருந்தது.
கோத்தாபய ராஜபக்ச பயணிக்கும் வழி தவறானது, பண முதலைகளும், முன்னாள் இராணுவ அதிகாரிகளான கடும்போக்காளர்களுமே அவரைச் சுற்றியிருக்கிறார்கள் என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறான போக்கில் நீடித்தால், சர்வதேச மட்டத்தில் அவரால் ஆதரவைப் பெற முடியாமல் போகும் என்ற கருத்தை முன்வைத்து தான், தயான் ஜயதிலக இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதாவது கோத்தாபய ராஜபக் ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதானால், அதற்கு முன்னர் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகசிவில் ஆட்சியை நடத்தக் கூடிய நிர்வாகியாக இருப்பார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தயான் ஜயதிலக போன்றவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
ஆனால், கோத்தாபய ராஜபக் ஷவினால் இதுவரையில் அந்த தகைமையை நிரூபிக்கவும் முடியவில்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள் நிரூபிக்கவும் விடப் போவதில்லை.
அஸ்கிரிய அனுநாயக்கர் போன்றவர்களும் சரி, றியர் அட்மிரல் சரத் வீர சேகர போன்றவர்களும் சரி, கோத்தாபய ராஜபக் ஷவை ஒரு ஹிட்லராக- இரும்பு மனிதராக, இராணுவ ஆட்சியை ஒத்த ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்தக் கூடியவராக உருவாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
அதற்கான தூண்டுதல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று அவரை நம்ப வைக்க முனைகிறார்கள்.
அவர்கள் அவ்வாறு நம்புவது ஒற்றையாட்சியை இரும்புக்கரங்களால் உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலானது.
அதிகாரப் பகிர்வு முயற்சிகளைத் தோற்கடித்து, வடக்கையும், கிழக்கையும், இறுக்கமான பிடியில் வைத்துக் கொண்டு, தமிழர்களை அடக்கியாள வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனையின் அடிப்படையினலானது.
கோத்தாபய ராஜபக் ஷவை வைத்தே அதனைச் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்று மட்டும் புரியாமல். இருக்கிறது.
நவீன உலகம், சர்வாதிகாரிகளையோ, இராணுவப் பாணி ஆட்சியாளர்களையோ விரும்புவதும் இல்லை, விட்டு வைப்பதும் இல்லை.
ஜனநாயக அரசியலுக்கு ஒத்துவராதவர்களை, அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதையும், அவ்வாறு வந்தவர்களை விரட்டுவதையும் சர்வதேச அரசியல் ஒரு ஒழுக்கமாகவே பின்பற்றி வருகிறது.
அண்மையில், மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக சொல்லப்படுகின்ற விடயங்களில் இதுவும் ஒன்று.
பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது வேறு, ஜனநாயக அரசியலை அதற்குரிய மாண்புகள், பண்புகளுடன் கொண்டு நடத்துவது வேறு என்று, குறிப்பிட்டே, கோத்தாபய ராஜபக் ஷ பொருத்தமற்ற வேட்பாளர் என்பதை மஹிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர் விளக்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், கோத்தாபய ராஜபக் ஷவை ஒரு இராணுவ ஆட்சியாளராக ஹிட்லராக, உருவாக்கி விடும் முனைப்புகள் தான் தெற்கில் தீவிரமடைந்திருக்கின்றன.
இத்தகைய உசுப்பேற்றல்களுக்கு கோத்தாபய ராஜபக் ஷவும், அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் போலவே தோன்றுகிறது.
ராஜபக் ஷவினரின் தரப்பினால், ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான் என்று, அவர் இன்னமும், உறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படைத் தேவையான அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமையையும் அவர் துறக்கவில்லை.
அதற்குள்ளாகவே, அவரை முன்னிறுத்தி ஒரு இராணுவ ஆட்சிப்பாணியிலான, ஹிட்லராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு குறுகிய சிந்தனை கொண்ட கூட்டம் கிளம்பியிருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில், மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்பதில் ஞானசார தேரரின் பொது பலசேனா முக்கிய பங்காற்றியது. கோத்தாபய ராஜபக் ஷவுக்கு நெருக்கமாக இருந்த பொது பலசேனாவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த முஸ்லிம்கள், மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்து விலகினார்கள்.
அதேபோன்றதொரு நிலை இப்போது உருவாகி வருவது போலுள்ளது. கோத்தாபய ராஜபக் ஷவைச் சுற்றியிருப்பவர்கள், அவரை ஒரு சர்வாதிகாரியாக உருவாக்கப் போவதாக கிளப்பி விடும் மாயை, ஜனநாயக அரசியல் சக்திகளையம் சாதாரண மக்களையும் அச்சத்துக்குள் தள்ளியிருக்கிறது.
இது, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிரான ஓர் அலையைத் தோற்றுவிக்கும் சூழலை உருவாக்கலாம்.
ஏனென்றால் ஜனாதிபதி தேர்தல் என்பது, தனியே சிங்கள மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் முக்கியமானவை.
அதனைக் கருத்தில் கொள்ளாமல், கோத்தாபயவைக் கொண்டு ஓர் இராணுவ ஆட்சியை, ஏற்படுத்தி, அவரை ஒரு ஹிட்லராக மாற்றி சிங்களப் பேரினவாத கனவுகளை நனவாக்கலாம் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.
நாட்டை மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் செல்வதற்கு அனுமதியேன் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதும், இதனை அடிப்படையாக வைத்துத் தான்.
ஆனாலும், கோத்தாபய ராஜபக் ஷவைச் சுற்றி சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் கட்டியெழுப்பி வரும் கோட்டை அவர்களுக்கே ஆபத்தானது. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெரியாத சூத்திரம் அல்ல.
இருந்தாலும் அவர் இதனை விட்டுப் பிடிக்க நினைக்கிறார் போலும், ஏனென்றால், கோத்தாபய ராஜபக் ஷ தன்னை மிஞ்சியவராக வளருவதை அவரும் விரும்பவில்லை.
தனது விருப்பங்களுக்கு அப்பால் கோத்தாபய ராஜபக் ஷவை சுற்றி உருவாக்கப்பட்டு வரும் ஒளிவட்டத்தை மஹிந்த இரசிக்கவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.