பாடசாலையில் திடீரென சுகயீனமடைந்த 13 வயதுடைய மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் எட்டு மாத கர்ப்பிணி என்பது தெரிய வந்ததாக தங்காளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரண்ண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாடசாலையில் வைத்து திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
இதனைடுத்து ஆசிரியர்களால் மாணவியின் பாதுகாவலர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாணவியின் மாற்றாந்தாய் மூலம் பாடசாலை சீருடையுடனேயே கடந்த 11ம் திகதி தங்காளை ஆதார வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அந்த மாணவி எட்டு மாத கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.
மாணவியின் சுகயீன நிலை காரணமாக சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலை அதிகாரிகளால் ஹுங்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவி குணமடைந்து வருவதாகவும், குழந்தை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஹுங்கம பொலிஸார் ரண்ண, கஹமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மாணவிக்கு மாமா உறவுமுறையுடையவர் என்றும், மாணவியின் வீட்டுக்கு அருகிலேயே அவர் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.