மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்திற்கு முரணாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி பஸ் வண்டிகளை அல்லது கனரக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக அமுலில் உள்ள சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி பஸ் வண்டிகள் செலுத்தப்படுகின்றமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் கிடைக்குமாயின், பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும்.
இதேவேளை, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்காக 100 ரூபா செலவீனத்தை ஏற்றுக் கொள்ள அரசாங்கத்திற்கு நேர்ந்திருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. லொறி மற்றும் பஸ் உரிமையாளர்களின் மண்ணெண்ணெய் பயன்பாடு கடந்த வருடத்தின் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 41 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால், அரசாங்கத்திற்கு 400 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மண்ணெண்ணெய்யின் விலையை 70 ரூபாவினால் குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.