Site icon Colourmedia News

குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு சிறை தண்டனை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 145 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் நடிகர் விஷால், தீபா உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு 72 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இதற்கு மேலாக ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தமிழகத்தின் ஒரே தொகுதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஆகும்.

1996-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தலில் 1350 பேர் போட்டியிட்டனர். அப்போது தேர்தல் சீர்திருத்தம் உள்பட கோரிக்கைகளை முன்நிறுத்தி 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போட்டியிட வைத்தது. இதையொட்டி தேர்தல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு இதில் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு 1030 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

250 பக்க புத்தக வடிவில் வாக்கச்சீட்டு தயாரித்து பெரிய பேரல்களை வாக்குப் பெட்டிகளாக்கி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.என்.கிட்டுசாமியும், தி.மு.க. சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் போட்டியிட்டார்கள். இதில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார்.

1030 பேர் போட்டியிட்டு தேர்தலை சந்தித்த மொடக்குறிச்சி தொகுதி அப்போது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பிறகு இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் அதிகபட்சமாக 145 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்போது மொடக்குறிச்சி தொகுதி தேர்தலில் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்திய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியதாவது:-

1996-ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி தொகுதி தேர்தலில் நாங்கள் நதிகளை இணைக்க வேண்டும், தேர்தலில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் போன்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-க்கும் மேற்பட்டவர்களை போட்டியிட வைத்துள்ளோம். இதையொட்டி தேர்தல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் நடந்தது.

அந்த காலகட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேசன் எங்கள் விவசாய கூட்டமைப்பு வைத்த ஒருசில கோரிக்கைகளை ஏற்று சீர்திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி வைப்புத்தொகை (டெபாசிட்) உயர்த்தப்பட்டது. ஒருவர் முன்மொழிந்த நிலைமாறி 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

இதனால் அடுத்து நடந்த பொது தேர்தலில் தேர்தல் செலவு ரூ.200 கோடி குறைந்தது. ஈரோடு வந்திருந்த டி.என்.சேசன் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்களை அழைத்து பாராட்டி விட்டு சென்றார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றால் அவர் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் தேர்தல் செலவை அந்த வேட்பாளர் செலுத்த வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கிலேயே இருந்திருக்கும்.

1996-ல் கூட்டமைப்ப வைத்த கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து திருத்தங்கள் கொண்டு வந்திருந்தால் சுயேட்சைகள் மட்டும் அல்லாமல் சொற்ப அளவில் வாக்குகளைப் பெறும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களையும் கட்டுப்படுத்தி இருக்க முடியும். தேர்தல் ஆணையம் பெருமை பெறுவதும் சிறுமை அடைவதும் தேர்தல் ஆணையத்தின் செயல் பாட்டைப் பொறுத்தே அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version