உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்ததையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் தலா 4 ரன்னில் ஆட்டமிழக்க அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, கே.எல் ராகுல் அரைச்சதம் கடந்தனர். கோலி 54 ரன்னில் ஆட்டமிழக்க அவரையடுத்து கே.எல்.ராகுல் 66 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் – லபுஷேன் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. டெஸ்ட் மேட்ச்சைப் போல லபுஷேன் விளையாட, மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ரன்களை சேர்த்ததால் ரன்ரேட் குறையாமல் இருந்தது. இந்த இணையை பிரிக்க அடுத்தடுத்து பவுலர்களை கேப்டன் ரோஹித் சர்மா மாற்றிக் கொண்டே இருந்தார். இருப்பினும், பவுலர்களுக்கு இந்த ஜோடி எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை.
120 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 4 சிக்சர் மற்றும் 15 பவுண்டரியுடன் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லபுஷேன் 58 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.