கொல்கத்தா ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 89 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். வெஸ்லி பார்சி 41, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35, லோகன் வான் பீக் 23, பாஸ் டி லீடி 17 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்டாபிஸுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
230 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பங்களாதேஷ் அணியானது 42.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 35, மஹ்மதுல்லா 20, முஸ்டாபிஸுர் ரஹ்மான் 20, மஹேதி ஹசன் 17 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ் 3, தன்ஸித் ஹசன் 15, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 9, கேப்டன் ஷிகிப் அல் ஹசன் 5, முஸ்பிகுர் ரகிம் 1, தஸ்கின் அகமது 11 ரன்களில் வெளியேறினர்.
நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகிரன் 4, பாஸ் டி லீட் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைஏறக்குறைய இழந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பங்களாதேஷ் 5-வது தோல்வியை பதிவுசெய்துள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் 8 புள்ளிகளையே எட்ட முடியும்.
நெதர்லாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி வலுவான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் வெற்றியை பதிவு செய்திருந்தது. உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி இரு வெற்றிகளை பெறுவது இதுவே முதன்முறையாகும்.