Site icon Colourmedia News

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு : வெளிச்சத்துக்கு வராத ஆட்சேர்ப்பு 

இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. 

எனினும், இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், மௌனத்தை கடைப்பிடிக்கிறது. 

ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதற்கமைய, சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 250 தாதியர்கள், 100 இரசாயன பரிசோதகர்கள், 200 தாதிய உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

03.01.2023 திகதியிடப்பட்ட கடித பரிமாற்றங்களுக்கமைய, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான மேற்படி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால், குறித்த கடித பரிமாற்றத்தின் பின்னர்,  அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக பின்பற்றப்பட்ட முறைமை, தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரக்கோவை உள்ளிட்ட எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, சுகாதார அமைச்சில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயம் சம்பந்தமாக தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பிறிதொரு அதிகாரம் மிக்கவர்களை நோக்கி விரல் நீட்டிச் செல்லும் நிலைமையே நீடித்தது.

இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் குறித்த வெளிநாட்டுப் பணியிடங்கள் மற்றும் அதற்காக பணிக்கமர்த்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கோரியபோதும்,  அவர்களிடத்திலும் அதுபற்றிய எந்தவொரு தகவலும் காணப்படவில்லை என்றே பதிலளிக்கப்பட்டது. 

இந்நிலையில், “தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு சில சர்வதேச நாடுகள் எமக்கு உதவிகளை செய்யும் விதமாக வேலைவாய்ப்புகளை இலவசமாக பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளன. ஆனால், அதை பயன்படுத்தி தனிப்பட்ட சிலர் தங்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்தாக திரைமறைவில் செயற்பட்டு வருகின்றனர்” என சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

“குறிப்பாக, சுகாதாரத் திணைக்களத்தின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை சுகாதார பணியாளர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தி, அந்த வாய்ப்புக்களை முறையற்ற விதத்தில் கையாண்டு, அதனை ஒரு வியாபாரமாக மாற்றி நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தொடர்பாக எமது சங்கத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அநுராதரபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில் பணியாற்றும் தாதியான வத்சலா குருசிங்ஹ கூறுகையில்,

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளமை தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்தன. நாமும் அதற்கு விண்ணப்பிக்க முயற்சித்தோம். ஆனால், முறையான தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை. 

குறிப்பாக, கடந்த பல வருடங்களாகவே இவ்வாறான வேலைவாய்ப்புகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதில்லை. அவை அனைத்தும் கொழும்பில் இருக்கின்ற உயர் அதிகாரிகளின் பரிந்துரை மற்றும் பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயத்தை வெளிப்படுத்தியமைக்காக தான்  சேவைக்காலத்தில் பழிவாங்கப்படலாம் என்றும் கூறுகின்ற அவர், மோசடிகளை அம்பலமாக்குவதில் தான் அச்சத்துடன் பின்னிற்கப் போவதில்லை எனவும்,  பாதிக்கப்பட்டவர்கள் தம் நிலைமைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியை சேர்ந்த வைத்தியர் லோகநாதன் முகுந்தன் கூறுகையில்,  

நான் இந்த விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள் பலரிடமும் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் ‘இவ்விவகாரம் சம்பந்தமாக பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டாம்’ என்றே அறிவுறுத்துகின்றார்கள்.

ஆகவே, வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான பணியிடங்கள் தொடர்பில் இரகசியமான செயற்பாடுகள் காணப்படுகின்றன என்றே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

இந்த மூவரின் கூற்றுப்படி, அமெரிக்காவில் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இரகசியமாக நிறைவுக்கு வந்துள்ளமை தெளிவாகிறது. அத்துடன், இவ்விடயம் திட்டமிட்ட வகையிலேயே மறைக்கப்படுகிறது என்பதும் உறுதியாகிறது. 

இந்நிலையில், அம்பாறை மாவட்ட வைத்தியசாலையொன்றில் இரசாயன பரிசோதகராக கடமையாற்றும் ஜே.எம்.ரிஸ்வான் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சற்றே வித்தியாசமானதாக அமைந்துள்ளது. 

வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் தனக்கு கிடைக்கின்றபோது, தான் அதற்காக விண்ணப்பித்து ஏமாற்றமடைந்ததாகவும், இவ்விடயத்தில் அதிகார வர்க்கத்தினரின் கரங்களே ஓங்கியிருக்கிறது என்பதை தன் அனுபவத்தில் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான வாய்ப்பினை பெறுவதற்காக விண்ணப்பிக்க  முயற்சித்த அனுபவம் எனக்குள்ளது. அந்த விண்ணப்பத்தில் அரசியல் பின்புலத்துடனான பரிந்துரை முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தகையதொரு பரிந்துரையை பெற அப்போது என்னால் முடியவில்லை. அதனாலேயே நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை இழந்தேன். எதிர்பார்ப்பால் ஏமாற்றமே எஞ்சியது” என்று அவர் கூறினார்.

அத்துடன், “உரியவாறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தாலும், என் போன்றவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது மிகவும் அரிதானதே. இதனால் திறமையான பலர், தங்கள் தொழிலையே இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். இங்கு திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை” என்றும் அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

அதேவேளை பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியொருவர் கூறுகையில்,  

நான் சேவையில் இருந்த காலத்திலும் இவ்வாறான நிலைமையே இருந்தது. அன்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வருகின்றபோது, அமைச்சருடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் அவருடைய சிபாரிசின் பேரில் விண்ணப்பிப்பார்கள்.

அதேபோல் சுகாதார அமைச்சின் அதிகாரிகளினது நன்மதிப்பை பெற்றவர்கள் அல்லது அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குபவர்கள் உள்ளிட்டவர்களுக்கே முதன்மைத் ஸ்தானம் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும். 

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை என்பது என்னை பொறுத்தவரையில், புதிய விடயமொன்றல்ல.

மேலும், தற்பொழுது வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்துகளையே விற்பனை   செய்வதாக தகவல்கள் உள்ளன. ஆகவே, அதன் அடுத்த பரிமாணமாக, இவ்வாறான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் விற்பனை செய்யப்படாவிட்டால், அதுதான் புதுமையாக விடயம்’ என்றார்.

மேலும், இவை தொடர்பாக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான சமன்த திசாநாயக்க கூறுகையில், 

வெளிநாடுகளிலான வேலைவாய்ப்புகள் அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கின்றபோது அதனை முறையாக கையாள வேண்டுமெனில்,  கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையை மீண்டும் அமுலாக்குவது அத்தியாவசியமாகிறது.

குறித்த வேலைவாய்ப்புக்கள் பற்றிய விபரங்கள், அதற்கான தகுதிகள் உள்ளிட்ட அனைத்தும் வர்த்தமாணி மூலம் அறிவிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளில் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும். அதன் பின்னர் முறையான துறைசார் நிபுணத்துவப் பரீட்சைகள் நடைபெற்று, பின்பு நேர்முகத் தேர்வின் இறுதியில் பெறப்படும் புள்ளிகளுக்கமைய தெரிவுகள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த செயன்முறை பின்பற்றப்படாத பட்சத்தில், வெளிநாடுகளில் இலங்கை அரச சேவை ஊழியர்களுக்களின் பணித்தரம் தாழ்த்தப்பட்டுவிடும். அதனால், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிக்கமர்த்தப்படும் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். இது சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தினை மேலும் பாதிப்பதாகவே அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version