Site icon Colourmedia News

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம்’-ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அறிவிப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு இரு நாடுகள் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பும் முயற்சிகளை தொடர்ந்து இந்தியா மேற்கொள்ளும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தர தூதர் ஆர்.ரவீந்திரா தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பேசிய அவர், “சுகாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு வளர்ச்சி கூட்டாண்மை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். இந்த சவாலான காலங்களில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும்.

பாலஸ்தீனியர்களுக்கு சுமார் 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களைக் கொண்ட ராணுவ விமானத்தை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது .

போரில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்த ரவீந்திரா, “அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது, அவற்றை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். உயிரிழப்புகள் மற்றும் அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இஸ்ரேல் அந்த பயங்கர தாக்குதல்களை எதிர்கொண்டபோது அவர்களின் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம்” என்றார்.

மேலும், “நடக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். அனைத்து தரப்பினரும் பொதுமக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகளின் தீர்வுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது, மேலும் “இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

Exit mobile version