Site icon Colourmedia News

விஜயதசமி – ஏன் கொண்டாடுகிறோம்?

நவராத்திரி என்பது தீமை மற்றும் விரும்பத்தகாத இயல்பை வெல்வதைப் பற்றியும், நமது வாழ்வின் அனைத்து அம்சங்களுடன், நமது நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் விஷயங்கள் மற்றும் கருவிகளுக்கும்கூட மரியாதை அளிப்பதைப் பற்றிய குறியீட்டு முறைகளால் நிறைந்திருக்கிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்ற மூன்று அடிப்படை குணங்களின்படி வகைப்படுத்தப்படுகின்றன. முதல் மூன்று நாட்களும், தமஸ் எனப்படும் துர்கை மற்றும் காளி போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களைக் குறிக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் ரஜஸ் குணத்துக்குரிய லட்சுமியுடன் தொடர்புடையவை – மென்மையான ஆனால் பொருள் சார்ந்த பெண்தெய்வங்கள். கடைசி மூன்று நாட்கள் சத்வ குணத்துக்குரிய சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது அறிவு மற்றும் ஞானமடைதலுடன் தொடர்புடையது.

விஜயதசமி – வெற்றியின் நாள்
இந்த மூன்றிலும் முதலீடு செய்வது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட விதமாக உருவாக்கும். தமஸில் முதலீடு செய்தால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்திவாய்ந்தவராக இருப்பீர்கள். நீங்கள் ரஜஸில் முதலீடு செய்தால், வேறு ஒரு விதத்தில் நீங்கள் சக்திவாய்ந்தவராக இருப்பீர்கள். நீங்கள் சத்வத்தில் முதலீடு செய்தால், முற்றிலும் வித்தியாசமான ஒரு விதத்தில் நீங்கள் சக்திவாய்ந்தவராக இருப்பீர்கள். ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் கடந்து சென்றால், அது இனி சக்தி வாய்ந்தவராக இருப்பதைப் பற்றி அல்ல, அது விடுதலை அடைவதைப் பற்றியது. நவராத்திரிக்குப் பிறகு, இறுதி நாளாகிய பத்தாவது நாளன்று விஜயதசமி – அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வென்றுவிட்டீர்கள். நீங்கள் அவற்றுள் எதற்கும் இடம் கொடுக்கவில்லை, அவை ஒவ்வொன்றையும் நீங்கள் கடந்து வந்தீர்கள். அவை ஒவ்வொன்றிலும் நீங்கள் பங்கெடுத்தீர்கள், ஆனால் அவை எதிலும் நீங்கள் முதலீடு செய்யவில்லை. நீங்கள் அவைகளை வெற்றி கொண்டீர்கள். அதுதான் விஜயதசமி, வெற்றியின் திருநாள். இது நம் வாழ்வில் முக்கியமான எல்லாவற்றிற்கும் மரியாதை மற்றும் நன்றியுடன் இருப்பதனால், காரியசித்திக்கும் வெற்றிக்கும் வழிவகுக்கிறது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகிறது.

தசரா – பக்தி மற்றும் மரியாதை
நாம் தொடர்பில் இருக்கும் பல விஷயங்களுள், நம் வாழ்க்கையை நிகழச்செய்வதிலும், உருவாக்குவதிலும் பங்களிக்கும் பல விஷயங்களுள், நமது உடலும் மனமும் நம் வாழ்க்கையை வெற்றிகரமாக்க நாம் பயன்படுத்தும் மிக முக்கியமான சாதனங்களாக இருக்கின்றன. நீங்கள் நடந்து செல்லும் பூமியையும், சுவாசிக்கும் காற்றையும், நீங்கள் அருந்தும் நீரையும், உண்ணும் உணவையும், நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்களையும், உங்கள் உடல் மற்றும் மனம் உட்பட நீங்கள் பயன்படுத்தும் எல்லாவற்றையும் மரியாதையுடன் அணுகுவதால், நாம் எப்படி வாழமுடியும் என்ற வித்தியாசமான ஒரு சாத்தியத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். இந்த அனைத்து அம்சங்களுடன் மரியாதை மற்றும் பக்தி செலுத்தும் தன்மையில் இருப்பது, நாம் ஈடுபடும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியை உறுதி செய்யக்கூடிய ஒரு வழியாக இருக்கிறது.

Exit mobile version