Site icon Colourmedia News

நவராத்திரி என்றால் என்ன?

நவராத்திரி விளக்கம்

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரும் பெண்தன்மையின் மூன்று பரிமாணங்களான பூமி, சூரியன் மற்றும் சந்திரனை அல்லது தமஸ் (செயலற்ற நிலை), ரஜஸ் (செயல், வேட்கை), சத்வ (அனைத்தையும் கடந்த நிலை, அறிவாற்றல், தூய்மை) குணங்களைக் குறிக்கிறார்கள்.

வலிமை அல்லது அதிகாரத்தை விரும்புபவர்கள், தாயாக திகழும் பூமி தேவி, துர்க்கை அல்லது காளி ரூபங்களை வணங்குகிறார்கள். செல்வவளம் அல்லது பொருள்தன்மையான பரிசுகளை அடையும் ஆசை, வேட்கை உள்ளவர்கள் லட்சுமி அல்லது சூரியனை வணங்குகிறார்கள். அறிவாற்றலை வேண்டுபவர்களும், நிலையற்ற இந்த உடலின் எல்லைகளை கடந்து செல்ல விரும்புபவர்கள் அல்லது கரைந்துபோக விரும்புபவர்கள் சரஸ்வதி அல்லது சந்திரனை வணங்குகிறார்கள்.

நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இந்த அடிப்படையான குணங்களைக் கொண்டே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.

இது வெறும் குறியீடு அல்ல, சக்தி நிலையிலும் இது உண்மையே. மனிதர்களாக நாம் இந்த பூமியிலிருந்து தோன்றினோம், செயல்படுகிறோம். சில காலத்துக்குப் பிறகு, நாம் மீண்டும் செயலற்றவர்களாகி பூமியின் மடியிலேயே விழுந்து விடுகிறோம். இது தனி மனிதர்களாக நமக்கு மட்டுமல்ல, விண்மீன் கூட்டத்திற்கும் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் இதுவே நிகழ்கிறது. செயலற்ற நிலையில் இருந்து துவங்கி, இந்த பிரபஞ்சம் முழு வேகத்தில் செயல்பட்டு, மெதுவாக மீண்டும் செயலற்ற நிலைக்கு திரும்புகிறது. இது இப்படி இருந்தாலும், இந்த சுழற்சியை உடைக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.

மனிதர்களின் பிழைப்பிற்கும், நல்வாழ்வுக்கும் தேவியின் முதல் இரண்டு பரிமாணங்கள் தேவை. இவை எல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான ஆர்வம் மூன்றாவது பரிமாணம். சரஸ்வதியை நீங்கள் உங்களிடம் அழைக்க வேண்டுமென்றால், உங்களிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் சரஸ்வதியை அணுகமுடியாது.

நவராத்திரி – ஒன்பது தினங்கள், மூன்று தன்மைகள்

இந்த மூன்று பரிமாணங்களும் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை. குறிப்பிட்ட அசைவற்ற தன்மை, ஆற்றல், துடிப்பான அதிர்வு என இந்த மூன்று தன்மைகளிடம் இருந்து விடுபட்டதாக ஒரு அணுவும் இல்லை. இந்த மூன்று தன்மைகளும் இல்லாமல் உங்களால் எதையும் பிடித்துவைக்க முடியாது, அது உடைந்துவிடும். வெறுமே சத்வ குணமாக இருந்தால், உங்களால் இங்கே ஒரு கணம்கூட இருக்க முடியாது – நீங்கள் போய்விடுவீர்கள். வெறுமே ரஜஸ் குணமாக இருந்தால், அது வேலை செய்யப்போவதில்லை. வெறுமே தமஸ் குணமாக இருந்தால், நீங்கள் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த மூன்று குணங்களும் எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த மூன்றையும் எந்த அளவுக்கு நீங்கள் கலக்கிறீர்கள் என்பது மட்டுமே கேள்வி

Exit mobile version